சுங்கசாவடி கொள்ளை: இதற்கு முடிவே கிடையாதா?
தமிழ்நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடிகள் மூலம் மக்கள் பணம் எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பது பற்றிய தொகுப்பு.
இந்தியா முழுவதும் 461 சுங்கசாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டுமே 42 உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக சுங்கசாவடி உள்ளது.
சமீபத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி தளத்தில் சென்று பார்த்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தது. அந்த தளத்தில் கிடைத்த தகவல்கள்:
ரூ.1016 கோடி செலவில் அமைக்கப்பட்ட 33 கிமீ சாலையில் 2009ம் ஆண்டு முதல் சுங்கம் வசூலிக்க தொடங்கினர். அவர்களது தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஒரு நாளில் 51684 வாகனங்கள் அவ்வழியாக கடந்து செல்கின்றன.
இந்த எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டுப்பார்த்தால், சராசரியாக ஒரு வாகனத்திற்கு ரூ.80 என கணக்கிட்டால், ஒரு நாளில் சராசரியாக ரூ.41,34,720 வசூலாகிறது. வருடத்திற்கு, ரூ. 1,509,172,800.00 வசூலாகிறது. அதாவது வருடத்திற்கு 150 கோடி வசூல். கடந்த 10 ஆண்டுகளில், 1500 கோடி வசூலாகியுள்ளது. ஆனால், இவர்கள் சாலை அமைக்க முதலீடு செய்ததோ, ரூ.1016 கோடி.
இன்னும் இவர்கள் பத்தாண்டுகளுக்கு சுங்கம் வசூலிக்கும் போது, மொத்தத்தொகை 3000 கோடியை எட்டிவிடும்.
அதுமட்டுமல்லாது, சமயபுரம் சுங்கசாவடியில் 36209 வாகனங்கள், தொழுதூரில் 24618, தர்மபுரியில் 55726 வாகனங்கள் என அனைத்து சுங்கசாவடிகளிலும் வசூலிக்கப்படும் தொகையை கணக்கிட உங்கள் கால்குலேட்டர் திணறும்.
ஒரு சுங்கசாவடியில் மட்டும் 3000 கோடி என்றால், தமிழ்நாடு முழுக்க உள்ள 42 சுங்கசாவடி வசூலை கணக்கிட்டுப்பார்த்தால் தலை சுற்றுகிறது. மக்களின் பணம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது, இதற்கு முடிவுதான் என்ன?
இதனை தனியாருக்கு கொடுத்த அரசு கடன் வாங்கி தானே மேற்கொண்டிருந்தால், இந்த தொகை அரசுக்கு கிடைத்திருக்கும். மேலும், இதுவரை சுங்கசாவடியில் வசூலித்த பணத்திற்கான வெள்ளை அறிக்கையை அரசு கேட்டால், உண்மையான தொகை தெரியவரும்.
நெடுஞ்சாலை அமைக்க ஒரு கி.மீக்கு ஒரு கோடி செலவாகிறது என அரசு கூறுகிறது. ஏன் இதனை அரசே ஏற்று நடத்தியிருக்கக் கூடாது?
சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம் என்பது போல இருக்கிறது,இந்த நடவடிக்கை.