கோகுல்ராஜ் கொலை வழக்கில் 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.;
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனையும், அவரது கார் டிரைவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து 2022 மார்ச் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் இறந்து விட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர். 2022 நவம்பரில் இந்த வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை ஆஜராக உத்தரவிட்டு அவரிடம் விசாரணை நடத்திய மதுரை கிளை, சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
பின்னர், நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின் மேல் முறையீட்டு வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், 2023 பிப்ரவரியில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் விவரம் வருமாறு:
கோகுல்ராஜ், சுவாதியுடன் திருச்செங்கோடு கோயிலுக்கு சென்றது, அங்கிருந்து அவர் மாயமானது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற குற்றச் சங்கிலி தொடரை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதேசமயம், யுவராஜுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்காமல், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக குறைத்தும் தீர்ப்பளித்தனர்.
மேலும், மதுரை நீதிமன்றத்தால் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிபதிகள், யுவராஜ் உள்பட 10 பேரின் மேல் முறையீட்டு வழக்குகளையும், ஐந்து பேர் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாய் சித்ராவும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.