மனநல மறுவாழ்வு மையங்களில் ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மனநல மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவை உரிய அனுமதியின்றி செயல்படுவதாகவும், அரசின் விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பது இல்லை என்றும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவரின் கணவர் முகமது ரஹீம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அவரை சிட்லப்பாக்கத்தில் உள்ள எவர் கிரீன் மையத்தில் அனுமதித்து உள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் முகமது ரஹீமின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவரை பார்ப்பதற்காக குடும்பத்தினர் நேரில் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எவர் கிரீன் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தாக்கியதாலேயே தமது கணவர் உயிரிழந்ததால் உரிய இழப்பீடு கோரி அவரது மனைவி கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், சம்பவம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட அந்த மறுவாழ்வு மையம் உரிய அனுமதி எதுவும் பெறவில்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, நான்கு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட எவர் கிரீன் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவ இயக்குனருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களிலும் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டு உள்ளார்.