காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை 15 மாதங்களில் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் 15 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-07-09 12:44 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள், மலைப் பிரதேசங்களில் மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், காலி பாட்டில்களை திருப்பி செலுத்தும் போது அந்த தொகையை திருப்பி கொடுக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. முதற்கட்டமாக இரு மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது

நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காலி பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கான இடவசதி ஏற்பாடு செய்வதில் சிக்கல் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான நடைமுறை, விலை நிர்ணயம் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கோவை மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்திய பின், 2023 ஜூன் வரை 95 சதவீதம் காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்றும், நீலகிரி மற்றும் இதர மலைப் பிரதேசங்களில் 96 சதவீதமும் திரும்பப்பெறப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பாட்டில்களுக்கு மாற்றான பொருளை அறிமுகப்படுத்த திட்டம் உள்ளதாகவும், அதை அறிமுகப்படுத்தினால் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது போல், அதையும் திரும்ப பெற உள்ளதாகவும், அதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது உள்ள 4,829 கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை 4,397 கடைகளில் அமல்படுத்த வேண்டும் என்றும், 471 கடைகளில் மட்டுமே காலி பாட்டில்களை வைப்பதற்கு இடம் உள்ளதால், மற்ற கடைகளில் கூடுதல் இடம் தேவைப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகள், அவற்றை விற்பதற்கு டெண்டர், ஊழியர்களுக்கு பயிற்சி, கூடுதல் இடவசதி, நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை படிப்படியாக இரண்டு ஆண்டுகளில் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்துவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையெடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை 15 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Similar News