பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை சீர்திருத்தும் நடவடிக்கைகளை எடுக்க உயர் நீதிமன்றம் ஆலோசனை
பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உயர் நீதிமன்றம் கூறியுள்ளது;
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில், அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,'பைக்' சாகசங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க, காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சாகசங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்ட காமராஜர் சாலை, ஈ.சி.ஆர்., சாலை, அண்ணாசாலை உள்ளிட்டவற்றில், சிறப்பு குழு தொடர் கண்காணிப்பில் ஈடுபடும். இந்த சாலைகளில் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த கேமராக்கள், சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை படம் பிடித்து, அவர்களுக்கு தானியங்கி முறையில் அபராத ரசீது வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிவேகம், சாகசங்களில் ஈடுபட்டதாக, கடந்த 2022ல் 18,209, 2023ல் 3,988, இந்தாண்டு இதுவரை 1016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன' என, பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் நீதிபதி தனது தீர்ப்பில், பைக் சாகசங்களில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், வயதுக்கு உரிய முதிர்ச்சி இல்லாமல் ஈடுபடுகின்றனர்.
சந்தையில் இன்று, தடையின்றி அதிவேக பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவற்றை வாங்கும் இளைஞர்கள், சாலைகளில் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி, சமூக ஊடகங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகத்தில், மற்றவர்களின், 'லைக்ஸ்' பெற, வீர சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து, அதை பதிவிடுகின்றனர்.
இதுபோல பொறுப்பற்ற முறையில், இரு சக்கர வாகனங்களை ஓட்டும், ரேசில் ஈடுபடும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
இந்த இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோல வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும். வழக்கு விசாரணை, ஏப்.24க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.