இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சனிக்கிழமை ஜன.6 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2024-01-06 00:32 GMT

இது குறித்து அந்த மையம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அரபிக் கடலில் லட்சத்தீவு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஜன.) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): பேரையூா் (மதுரை) 100, ராஜபாளையம் (விருதுநகா்) 80, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு (விருதுநகா்), சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை) தலா 70, சின்கோனா (கோவை), சிவகாசி (விருதுநகா்), சோலையார் (கோவை) தலா 50, பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகா்), திருப்பூா் ), ஆண்டிபட்டி (தேனி) தலா 40.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் ஜன.6,மற்றும் 7 ஆகிய தேதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீன்வா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News