18 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-06 08:41 GMT

வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் படம்.

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 6-ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இன்று (06.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (07.05.2023) மற்றும் நாளை மறுநாள் (08.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.05.2023 மற்றும் 10.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

05.05.2023 முதல் 10.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

06.05.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

07.05.2023 மற்றும் 08.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அதனை ஒட்டிய

தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 07.05.2023 தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

இவ்வாறு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News