சுபகிருது வருடம் பிறந்தது. தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்..

Subakiruthu Varudam-புதிய எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரை புதுவருடம் வரவேற்கப்படுகிறது.;

Update: 2022-04-14 00:51 GMT

Subakiruthu Varudam

Subakiruthu Varudam-உலக தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் இந்நாளை, அரசு விடுமுறை அளித்து கொண்டாடுகிறது. சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும், வாழ்த்துக்களை பரிமாறி கொண்டும் மற்றும் பல வகைகளிலும் தமிழ் வருடப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். கடந்தாண்டு பிலவ வருடம் பிறந்தது.இந்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கிறது.

சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். புதிய எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரை புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்-குங்குமம் பூசி மாவிலை தோரணம் கட்டி சித்திரை தாயை வரவேற்க மக்கள் தயாராகின்றனர்.

சித்திரை திங்கள் புலருவதற்கு முதல் இரவு வீட்டில் நிலைக்கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்-காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துவிடுவர்.

காலையில் துயில் நீங்கி எழும்போது அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

பூஜையறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புதுவருட பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்க பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர்மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.

மதிய உணவில் வேப்பம்பூபச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்புவடை, நீர்மோர், பருப்புபாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் அம்சமாக இச்செயல்பாடு கருதப்படுகிறது.

மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்கு சென்று, பலகாரங்களை பகிர்ந்துண்பது நிகழும்.வாழ்க்கை என்றாலே கசப்பும், இனிப்பும் கலந்ததுதான். இப்புத்தாண்டிலும் கசப்பும், இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.இந்நாளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் சிறப்புகளாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News