பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழ்நாடு மிஸ்ஸிங்.. அடுத்தடுத்த சர்ச்சையில் ஆளுநர்...

தமிழ்நாடு என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஆளுநர், பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழிலும் அதை தவிர்த்து உள்ளார்.

Update: 2023-01-10 06:38 GMT

ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழ்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் ஆளுநர் ரவி நேற்று கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் அறிக்கையை தான் ஆளுநர் சட்டப்பேரவையில் வாசிப்பது வழக்கம். ஆனால், நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த சில அறிக்கையில் சில வார்த்தைகளை ஆளுநர் ரவி தனது பேச்சில் தவிர்த்தார்.


ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், ஆளுநர் தவிர்த்த வார்த்தைகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார். அப்போது ஆளுநர் திடீரென அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வழக்கமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் விருந்து வழங்கப்படுவது உண்டு. அதன்படி, ஜனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை ஆளுநர் மாளிகையில் பொங்கல் திருவிழா நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அழைப்பிதழை வெளியிட்டு உள்ளது. ஆனால், பொங்கல் விழா அழைப்பதழிலும் ஆளுநர் பல்வேறு விஷயங்களை தவிர்த்து உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேநீர் விருந்து தொடர்பான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லோகோ இடம் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற முத்திரைக்குப் பதிலாக அசோகா சக்கரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

மேலும், தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற வார்த்தையை தொடர்ந்து ஆளுநர் தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் இந்த செயலர் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.

Tags:    

Similar News