சிட்டுக்குருவிகளுக்கு மரப்பெட்டி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
உலக சிட்டுக்குருவி தினமான இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிட்டுக்குருவிகளுக்கான மரப் பெட்டிகளை வைத்தார்.;
மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது . பொதுவாக சிட்டுக்குருவிகள் மனிதர்களை சார்ந்து வாழும் ஓர் பறவையினமாகும். அந்த காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் இயற்கையாகவே சிட்டுக்குருவிகள் சிறியளவு கூடு கட்ட அமைப்பிருக்கும். இதையே சிட்டுக்குருவிகள் தங்கள் வாழ்விடமாக மாற்றி வாழ்ந்து வந்தன.
ஆனால் தற்போது கான்கிரீட் காடுகள் வளர்ந்து வருவதால் பறவை உள்ளிட்ட உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் இருந்த 1,314 பறவைகளில் தற்போது 34 பறவைகள் மட்டுமே இருப்பதாக தெரியவந்தது.
முக்கியமாக சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிட்டுக்குருவிகளை பாதுகாக்க அரசும், தன்னார்வலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வீடு, அலுவலகங்களில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு மரப்பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றனர். இப்படி மரப்பெட்டி வைக்கும் இடங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில் சிட்டுக்குருவிகள் தங்க மரப்பெட்டி வைத்துள்ளார். இதுகுறித்து தமிழிசை தன் ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த நாள் பல்லுயிர் பெருக்கத்தில் அழகான சிட்டுக்குருவிகளை பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள். சிட்டுக்குருவிகளை பாதுகாத்து, அவற்றின் எண்ணிக்கையை மேம்படுத்த ஒரு சிறிய முயற்சியாக புதுச்சேரி ராஜ் நிவாஸ் வளாகத்தில் சிட்டுக்குருவிகளுக்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது’. இவ்வாறு கூறியுள்ளார்.