வரும் 5ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் வரும் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.;
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் 5ம் தேதி காலை 11-00 மணி அளவில் நடைபெறும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்தச் சட்டமுன்வடிவை ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இந்நிலையில், அந்தச் சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என 1-2-2022 அன்று பேரவைத் தலைவருக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல.
எனவே,ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும். இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2- 2022 அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.