உங்கள் செல்போனுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி வருகிறதா? பதற்றம் வேண்டாம்
உங்கள் செல்போனுக்கு பேரிடர் கால எச்சரிக்கை குறுஞ்செய்தி ஏதும் வந்தால் பதற்றம் அடைய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
நாம் பயன்படுத்தும் செல்போன் எண்ணுக்கு ஏதாவது ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்யும் கும்பல் ஏராளமாக உள்ளன. இதுதொடர்பாக காவல் துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதேுபோல, வங்கியில் இருந்து பேசுவதுபோல செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை கேட்டு மோசடி செய்யும் கும்பலும் உலா வருகிறது. தற்போதைய தகவல் புரட்சி உலகில் எதற்கெடுத்தாலும் செல்போன் மூலம் பயன்பாடு வந்துள்ள நிலையில், அரசும் தங்கள் சேவைகளை குறுஞ்செய்தி மூலம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மழை பாதிப்பு, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பி அலார்ட் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான ஒத்திகை நாளை (அக்டோபர் 20) நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் தங்களது செல்போன் எண்ணுக்கு பேரிடர் கால எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடைய வேண்டாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைதொடர்பு துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி நாளை (அக்டோபர் 20) செல்போன் எண்களுக்கு அனுப்பப்பட உள்ளது.
எனவே, இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.