திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கேஸ் கசிவு: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலை மீது பிரசாதம் செய்யும் விற்பனை கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால், பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-02-28 14:00 GMT

திருத்தணி மலைக்கோவில். (பைல் படம்)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை வீடாகும். இந்த கோவில் அமைந்துள்ள மலை மீது நிர்வாகம் சார்பில் பிரசாத கடை விற்பனை நிலையம் உள்ளது. இந்த கடைக்கு தேவையான பிரசாதங்கள் இனிப்பு பொங்கல், புளியோதரை, லட்டு, அதிரசம், முறுக்கு, போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு பணி விற்பனை நிலையத்தின் இரண்டாம் கீழ் தளத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் 5-க்கும் மேற்பட்ட கோயில் நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சமையல் செய்யும் பணியாளர்கள், பிரசாதம் மடித்து கொடுக்கும் ஊழியர்கள் என 15 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென்று சமையல் செய்யும் பகுதியில், 8- சிலிண்டர் இருக்கும் இடத்தில் ஒரு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பணியில் இருந்த சமையல் செய்யும் ஊழியர்கள், கோயில் பணியாளர்கள், 15 பேர் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.

இதையடுத்து கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு சென்று விடாத வகையில் பாதுகாப்பு தடுப்பு கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியது. இதனால் பிரசாத விற்பனை நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது.

உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு கோயில் ஊழியர்கள் தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை கைப்பற்றி, அதன் மீது தண்ணீர் ஊற்றி கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் இருந்து மொத்த சிலிண்டர் எரிவாயுவையும் வெளியேற்றினர். பின்னர் மீதி இருந்த ஏழு சிலிண்டரையும் பத்திரமாக பரிசோதனை செய்து பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். இந்த சிலிண்டர் கசிவு நிகழ்வால் மலைக்கோவிலில் 40 நிமிடத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News