விநாயகர் சதுர்த்தி விழா விற்பனை இல்லை -கவலையுடன் காத்திருக்கும் வியாபாரிகள்
நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் நிலையில், அதற்கான பொருட்கள் விற்பனை வெகு மந்தமாக உள்ளதாக விற்பனையாளர்கள் கவலை.
முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் கொரோனா பரவல் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பொது இடங்களில் இந்த ஆண்டும் விநாயகர் சிலை வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாக்களை வீடுகளிலேயே கொண்டாட தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் களிமண் சிலையில் விநாயகர், வண்ண வண்ண விநாயகர் சிலை, குடை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகள் காஞ்சிபுரம் நகரின் பல பகுதிகளில் சிறு வியாபாரிகளால் விற்கப்பட்டு வருவது வழக்கம்.
கூட்ட நெரிசலை தவிர்க்க, பொதுமக்கள் அதிகாலையிலே முதலே இந்த பொருட்களையும், விநாயகர் சிலைகளையும் வாங்க வருவது வழக்கம், அப்போது சந்தையில் அங்காடிகள் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும், வியாபாரிகளும் சுறுசுறுப்பாக இயங்குவதை காணமுடியும்.
ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் கெடுபிடி காரணமாகவும் இன்று பொதுமக்கள் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து விட்டதால் பெருத்த ஏமாற்றத்துடன் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இன்றும், நாளையும் தொடர் திருமண நாட்கள் என்பதால் பொதுமக்கள் திருமணங்களில் பங்கேற்கும் நிலை உருவாகியுள்ளதால் மாலையில் பொது மக்கள் வரக்கூடும் எனும் நம்பிக்கையில் வியாபாரிகள் காத்திருக்கின்றனர். இந்த காட்சிகள் காண்பவரை கவலை கொள்ளச் செய்தது.