அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-14 06:46 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்து, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக பதவி ஏற்றார். இந்தநிலையில், அவர் மீதான பழைய வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 7ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதன்படி கடந்த 7ம் தேதி இரவு முதல் 12ம் தேதி மதியம் வரை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து, சனிக்கிழமை மதியம் 2.46 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

இந்த வழக்கை தன் சேம்பரில் வைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். பின்னர் வருகிற 25ம் தேதி வரை செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக தாக்கல் செய்தனர். பின்னர், செந்தில்பாலாஜியை அதிகாரிகள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக இதுவரை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை தர வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை, கைது மெமோ உள்ளிட்ட ஆவணங்களை வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த தகவலை அமலாக்கத்துறை தரப்புக்கு தெரிவிக்க செந்தில்பாலாஜி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News