முக்கிய கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
திருக்கோயில்களில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உடற்சோர்வு ஏற்படுவதை தவிர்கும் விதமாக , இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இந்து அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 10 முக்கிய திருக்கோயில்களில் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதன்படி தலா 40 கிராம் எடையில் பொங்கல் , தயிர் சாதம் , லட்டு , புளியோதரை , சுண்டல் உள்ளிட்ட 4 முதல் 6 வகை பிரசாதம் வழங்கப்படும்.
இந்த திட்டம் தற்போது, வடபழனி ஆண்டவர் திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், திருவரங்கம் அரங்கநாதசாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் என மொத்தம் 10 முக்கிய திருக்கோயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 341 கோயில்களின் பிரசாதம் , நைவேத்யம் மற்றும் உணவுக் கூடங்களில் தயாராகும் உணவுகளுக்கு மத்திய அரசின் தரச்சான்று பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு திருக்கோயில்களிலும் வழக்கமான நாளில் 10 முதல் 15 ஆயிரம் பேர் அன்னதானம் பெறுகின்றனர். என்று கூறினார்.