தமிழக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார்
தமிழக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மதுரை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.;
தமிழக சட்டமன்ற முன்னாள் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா (வயது 76). உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
சேடப்பட்டி முத்தையா 1977, 80, 84, 1991 ஆகிய ஆண்டுகளில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். பெரியகுளம் எம்.பி. தொகுதியில் வென்று வாஜ்பாய் அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்துறை மந்திரியாக இருந்துள்ளார்.
2000 ஆண்டு வரை அ.தி.மு.க.வில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமாக இருந்த சேடப்பட்ட முத்தையா பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். தி.மு.க.வில் அவருக்கு தேர்தல் பணிக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இவர் 1945ம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி தேனி மாவட்டம் கல்லுப்பட்டி அருகே முத்தன்பட்டியில் பிறந்தார். தற்போது கடந்த பல வருடங்களாக திருமங்கலத்தில் வசித்து வந்தார். இவர் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் மிக நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடக்கது. எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை என அழைக்கப்பட்ட இவர் ஜெயலலிதாவால் கட்சியின் உண்மையான விசுவாசி என பாராட்டப்பட்டார்.
தி.மு.க.வில் இணைந்த பின்னர் மு.க. ஸ்டாலினிடம் மிக நெருக்கமாக காணப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மகன்களில் ஒருவரான சேடப்பட்ட மணிமாறன் தற்போது தி.மு.க.வில் முன்னணி தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.