மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று
மீனாட்சியம்மன் கோவிலில் வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.;
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
இறைவனே மன்னனாக அவதரித்து மதுரையில் ஆட்சி செலுத்தியதாக சொல்லப்படும் புராதன காலத்தைச் சேர்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் மட்டுமின்றி கோயிலின் கலை அழகைக் காண்பதற்காக வெளிமாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தினமும் நூற்றுக்கணக்கில் வந்துசெல்கின்றனர். அவர்களுக்கான சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்கனவே செய்து தந்துள்ளது.
இதையடுத்து திருக்கோயில் வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கோவில் வளாகம் முழுவதும் பசுமை நிறைந்ததாகவும், நவீன கற்கள் பதிக்கப்பட்டும் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. பின்னர் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று அலுவலர்களால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2011-ஆம் ஆண்டில் வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் சிறப்பாக இருப்பதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை இன்று தரச்சான்று வழங்கியுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருகிறதா என்று அதிகாரிகளால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சுகாதாரமான உணவுகள் தான் வழங்கப்படுகிறது என்று உறுதிபடுத்தபப்ட்ட பிறகே இந்திய உணவு பாதுகாப்புத் துறையால் இந்த தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் 26 கோவில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.