மீன்பிடி தடைக்காலம் அமல்! மீன்கள் விலை உயர வாய்ப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் 61 நாட்களுக்கு, தமிழக கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது;

Update: 2024-04-15 04:33 GMT

மீன்பிடித்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் - கோப்புப்படம் 

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. கிட்டதட்ட 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.

மன்னார் வளைகுடா கடலில் இந்த காலக்கட்டம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இந்த நேரத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால் 2 மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள வசவன்குப்பம், கைப்பாணி குப்பம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும்மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படும்.

இந்த தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது மீன் வலைகள், விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர். நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர். ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதற்கு தடை என்பதால் மீன்களின் வரத்து வெகுவாக குறையும். இதனால் சந்தைகளில் மீன் விலை உயர வாய்ப்புள்ளது.

அதேசமயம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மீன்கள் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும். மீன்கள் விலை கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலுக்குள் சென்றுள்ள படகுகள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடை காலம் தொடங்கிய நிலையில் நேற்றைய தினம் சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு தேவையான மீன்களை அவர்கள் வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News