முதலில் மாற்றம்...அடுத்து நீக்கம்...மு.க. ஸ்டாலின் எடுக்க போகும் அதிரடி

முதலில் மாற்றம்...அடுத்து நீக்கம் என மு.க.ஸ்டாலின் எடுக்க போகும் அதிரடி நடவடிக்கைகள் அமைச்சர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-30 03:21 GMT

முதல்வர் மு.க. ஸ்டாலின்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் முதல் மாற்றம் நேற்று நிகழ்ந்துள்ளது. மு. க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பதவி ஏற்ற போது இந்த அரசு மக்களுக்கான அரசு. இன்று பதவியேற்ற அமைச்சர்கள் தங்களது பணியை திறம்பட செய்ய வேண்டும். திறம்பட செய்ய முடியாத அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பாணியில் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

அவர் அன்று விடுத்த எச்சரிக்கை நேற்று செயலில் காட்டப்பட்டு இருக்கிறது அவ்வளவுதான். சுமார் பத்தாண்டு காலத்தில் முதல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பிற்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இதுவரை இருந்துவரும் எஸ். எஸ். சிவசங்கருக்கு , ராஜ கண்ணப்பன் இதுவரை வகித்து வந்த போக்குவரத்து துறை வழங்கப்பட்டு இருக்கிறது. இது அமைச்சரவையில் ஒரு மாற்றம் தான் என்றாலும் போக்குவரத்து துறை என்பது ஒரு வலுவான துறை என்றே கருதப்பட்டு வருகிறது. காரணம் அது மக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு துறை என்பது மட்டுமல்ல அன்றாடம் பல கோடி ரூபாய் பணம் புரளக்கூடிய ஒரு துறையும் ஆகும் .அந்த வகையில் இந்த மாற்றம் என்பது ராஜ கண்ணப்பனுக்கு ஒரு பின்னடைவுதான்.

அமைச்சர் ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு இன்னொரு அமைச்சருக்கு வழங்கப்பட்டு இருப்பதன் பின்னணி குறித்து நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை ஊடகங்கள் எத்தனையோ காரணங்களை கூறி வருகிறார்கள்.

ஆனால் முதல்வர் தரப்பில் இதுவரை எந்தவித ஒரு காரணமும் கூறப்படவில்லை. அது கூறப்பட வேண்டிய அவசியமும் இல்லை‌.ஏன் என்றால் இது  கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் எடுக்கக்கூடிய நடவடிக்கை. ஆனால் அரசியலில் நீண்ட வரலாறுக்கு சொந்தமான ராஜகண்ணப்பன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது மட்டுமல்ல தமிழக ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் எடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

ராஜகண்ணப்பன் ஆரம்பக்கட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்தவர் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணி ,நெடுஞ்சாலை, துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது மிகவும் பவர்ஃபுல்லாக இருந்த கண்ணப்பன் பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அந்த கட்சியை தி.மு.க.வில் இணைந்தார். இது அவருடைய கடந்த கால வரலாறு.

கட்சியிலும் சரி அமைச்சராக இருந்த காலகட்டங்களிலும் சரி அதிரடிக்கு பெயர் போனவர் அமைச்சர் ராஜகண்ணப்பன். அதனால் சர்ச்சைகளுக்கும் அவரிடம் பஞ்சமிருக்காது. அந்த வகையில் இப்போதும் பதவி ஏற்ற நாளில் இருந்து அவர் சிறுசிறு சர்ச்சைகளில் சிக்கினார். முதலில் போக்குவரத்து துறையில் தீபாவளிக்கு இனிப்பு வாங்கிய சர்ச்சை அடுத்து இப்போது முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார் என பல சர்ச்சைகள் வளர்ந்து கொண்டே வந்த நிலையில் தான் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அரசியல் ரீதியாக இந்த காரணங்கள் கூறப்பட்டாலும் கடந்த இரண்டு நாட்களாக அகில இந்திய அளவில் நடைபெற்ற பொது வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கம் தொடர்பாக கண்ணப்பன் எடுத்த நடவடிக்கைகள் மீது முதல்வர் மு.க‌ ஸ்டாலினுக்கு திருப்தி இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சாதாரண ஏழை எளிய மக்கள் மக்களின் வாகனமான அரசு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது பல தரப்பு மக்களிடமிருந்தும் அவரது காதுக்கு எட்டியதாகவும் தனது ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டு விட்டார்களே என்ற ஒரு ஆதங்கத்தின் காரணமாகவே ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் கூட அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மக்கள் பாதிக்கப்படுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அதனால் தான் அவர் துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த கையோடு இந்த அதிரடி நடவடிக்கையை  எடுத்திருக்கிறார்.

ஆட்சி அமைந்த பத்து மாத காலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த இந்த நடவடிக்கை தமிழக அமைச்சர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூற வேண்டும். காரணம் ஸ்டாலின் அவரது தந்தையான கருணாநிதி போன்ற மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் அல்ல. தவறு என்று தெரிந்தால் அது யாராக இருந்தாலும் தனது சாட்டையை சுழற்ற தவறியவர் இல்லை என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

இது அவர் இளைஞரணி செயலாளராக இருந்த காலத்திலிருந்தே கட்சி தொண்டர்களின் மனதில் பதிந்து விட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை .

இதுதொடர்பாக தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் சிலர் கூறுகையில் 'எங்கள் தளபதி தலைவர் கலைஞர் போல் அல்ல அவர். ஒரு நெருப்பு. அவரை யாரும் நெருங்க முடியாது .அவருக்கு தெரிந்தது எல்லாம் கட்சியின் உண்மையான தொண்டர்களும், மக்கள் நலனும் தான். மக்கள் நலம் பாதிக்கப் படுவதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை ஆட்சியில் இருக்கும்போதும் சரி ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்திலும் கூட அவர் மக்கள் பிரச்சினைகளுக்காக தான் பாடுபட்டார், பாடுபட்டும் வருகிறார். அவரது இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடரும். முதலில் மாற்றம்.... அதன் பின்னரும் தொடர்ந்து தவறு செய்யும் அமைச்சர்கள் நீக்கம் என்பது தான் அவரது கொள்கையாக இருக்கும் என்பது எங்களது கருத்து' என தெரிவித்தனர்.

அரசியல் நோக்கர்கள் இது தொடர்பாக கூறுகையில் பொதுவாக அமைச்சர்களுக்கு தங்களுக்கு மேல் ஒரு தலைமை இருக்கிறது என்ற ஒரு எண்ணம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்வார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் யாரை எப்போது தூக்கி அடிப்பார் என தெரியாது. அதனால் தான் அவரது ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது என்றே கூறவேண்டும். அதே பாணியில் தான் தற்போது ஸ்டாலினும் பயணிக்கிறார் என்பது எங்கள் கருத்து என்றனர்.

அம்மா பாணியோ, அய்யா பாணியோ எதுவாக இருந்தாலும் மக்கள் நலனுக்கு பங்கம் வரும்போது அமைச்சர்களை பந்தாடுவதில் தவறில்லை.

தகுதியான நபருக்கு தகுதியான பதவி வழங்க வேண்டும் என்கிற ஸ்டாலினின் முடிவுக்கு மக்களின் ஆதரவு தொடரும் என்பதில் ஐயமில்லை.

Tags:    

Similar News