சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ் பெற்ற சினேகாவை நடிகை குஷ்பு எதற்காக பாராட்டினார் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.;
சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ் பெற்ற சினேகாவை நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு பாராட்டி உள்ளனர்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நமது அனைவருக்கும் நன்றாக தெரியும். நமது அரசியல் சட்ட அமைப்பானது மதச்சார்பற்ற நாடு என்பதையே எடுத்துக் கூறுகிறது. அந்த வகையில் அது ஒரு புனித நூலாக கருதப்படுகிறது. ஆனாலும் இந்திய திருநாட்டில் இன்று வரை மதம், சாதிகள் தான் அரசியலை நிர்ணயிப்பது மட்டுமல்ல கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாதியின் அடிப்படையில் தான் ஆண்டாண்டு காலமாக இட ஒதுக்கீடும் உள்ளது.
என்ன தான் மதச்சார்பற்ற நாடு,மதச்சார்பின்மை தான் எங்களது கொள்கை என மத்தியில் ஆள்வோரும், மாநிலத்தில் ஆள்வோரும் சொல்லிக் கொண்டாலும் அந்த கட்சிகளின் சார்பில் தேர்தலில் சீட் ஒதுக்குவதும், அமைச்சரவை பதவிகளில் அமைச்சர்களை நியமிப்பதும் சாதி பலத்தின் அடிப்படையில் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மதச்சார்பற்ற நாடு சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அரசு என்று சொல்லிக் கொண்டு பள்ளியில் சேர்ப்பதில் இருந்து வேலை வாய்ப்பு வரை அனைத்திலும் சாதிதான் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆதலால் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு வாழ வேண்டும் என யாராவது நினைத்தாலும் அப்படி ஒரு சான்றிதழை பெறுவது என்பது குதிரை கொம்பாக இருந்து வருகிறது.
ஆக நமது ஜனநாயக நாட்டில் சாதியும் மதமும் அடிப்படை பிரச்சினைகளாக உள்ளன. குறிப்பிட்ட சாதிக்கான சான்றிதழை பெற்றால் தான் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியும். வேலை வாய்ப்பு பெற முடியும் சாதிகளற்ற, மதம் இல்லாத சான்றிதழ் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. எதற்கு இப்படி இல்லாத ஒன்றிற்கு நாம் போராட வேண்டும் என நினைத்து சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு வாழ நினைக்க வேண்டும் என நினைப்பவர்கள் கூட அதில் ஏற்படும் வாழ்க்கை நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு எதிர்கால சந்ததியினரின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஆட்டுமந்தை போல ஊரோடு ஒத்து நாமும் போய் விடுவோம் என தங்கள் சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு மற்றவர்களைப் போல அவர்களும் இறங்கி விடுகிறார்கள்.இது தான் உண்மை நிலை.
ஆனால் சுமார் 10 ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி சாதி, மதமற்ற சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருக்கிறார் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் சினேகா பார்த்திபன் ராஜா என்பவர். இவர் சாதி மதம் இல்லா சான்றிதழை பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சமூக அக்கறையுடன் பல்வேறு தொண்டாற்றி வரும் இவர் தற்போது கலைத்துறையிலும் கால் பதித்துள்ளார்.
சாதி மதம் இல்லா சான்றிதழ் பெற்ற சினேகா அதனை எப்படி பெற்றார் அவருடைய அனுபவம் என்ன என்பதை பற்றி கட்டுரையில் காணலாம்
சினேகாவின் பெற்றோருக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் சினேகா. பள்ளியில் சேர்க்கும்போது சாதி மதம் அற்றவர்கள் என்று கூறி தான் சினேகாவையும் அவரது பெற்றோர்கள் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் படித்து முடித்ததும் வேலைக்கான தேர்வு ,போட்டி தேர்வு போன்றவற்றில் கலந்து கொண்ட போது மீண்டும் சாதி மதம் பிரச்சினை தலையெடுக்க தொடங்கியது.
அதற்காக சோர்ந்து போகவில்லை சினேகா. இந்தியா மதச்சார்பற்ற நாடு. அரசியல் சட்டப்படி எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற உரிமை உள்ளதை போல பின்பற்றாமலும் இருக்கலாம் என்பதும் அரசியல் சட்டத்தின் ஒரு அம்சம். அதை வழக்கறிஞரான சினேகா புரிந்து கொண்டதால் அதை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார் 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அவர் நடத்திய சட்ட போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி தான் அவருக்கு சாதி மதம் இல்லா சான்றிதழ். அந்த வகையில் இந்தியாவில் சாதி மதம் இல்லா சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சினேகா பெற்றுள்ளார்.
சாதி மதம் இல்லா சான்றிதழ் பெற்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்ட போது நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் ரோகிணி, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் அரசியல் பிரபலங்கள் பலரும் சினேகாவை பாராட்டி இருக்கிறார்கள். உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொலைபேசியில் அழைத்து பேசி இருக்கிறார்கள். தேசிய அளவில் மட்டுமல்லாமல் இலங்கை, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருக்கும் பத்திரிகை வானொலி நிலையங்களுக்கும் கூட இது பரபரப்பு செய்தியானது.
சினேகாவை பின்பற்றி அவரது வழியில் இன்று இந்தியாவில் சுமார் 30 பேர் சாதி மதம் இல்லா சான்றிதழ் பெற்று இருக்கிறார்கள் என்பது இவர் நடத்திய சட்ட போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது சாதி மதம் இல்லா சான்றிதழ் பெற்றுள்ள சினேகா ஒரு வழக்கறிஞராக பணியாற்றுவது மட்டும் இன்றி கிராமப்புறங்களில் சாதி ஒழிப்புக்கான ஆயுதம் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் வழக்கறிஞராக கிராமப்புற பெண்களுக்கு சட்ட மற்றும் சமூகம் தொடர்பான விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். தில்லையாடி வள்ளியம்மை விருது, புரட்சிகர பெண் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சினேகா நாடோடி 2 எனும் திரைப்படத்தின் நிறைவு காட்சியில் தான் பெற்ற சான்றிதழை காட்டி புரட்சியின் தொடக்கம் என்று அங்கீகாரம் வழங்கியதை பெருமையாக கருதுகிறார்.
மேலும் இவருக்கு கலை துறையிலும் ஈடுபாடு அதிகம் உண்டு என்பதால் தனது கணவர் தமிழ் பேராசிரியராகவும், நாடகவியலாளராகவும் இருப்பதால் நாடகங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமா உதவி இயக்குனராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அவள் அப்படித்தான் 2 என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் சினேகா.
சாத மதம் இல்லா சான்றிதழ் பெற்றதன் மூலம் எதிர்கால இந்தியாவில் சாதி மதமற்ற சமுதாயத்திற்கு வித்திட்டிருக்கிறார் சினேகா. இவரை போல் பலரும் சாதி மதமற்ற சான்றிதழ் பெற்றால் தான் இந்தியாவில் சாதிகளையும், அதன் மூலம் உருவாகும் கலவரங்களையும் அடக்க முடியும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.