வடசென்னை அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-09-05 05:24 GMT

அனல் மின்நிலைய தீவிபத்து 

அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல்மின்நிலையம் நிலை ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றின் வாயிலாக, 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அனல் மின்நிலையத்தின் 2வது அலகில் பராமரிப்பு பணிகளுக்கு கடந்த ஒரு மாதமாக மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பராமரிப்பு பணிகள் முடிந்து, நேற்று முன்தினம், 2வது அலகில் மின் உற்பத்தி துவங்கியது. இந்நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், ரசாயன நுரை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த திடீர் தீவிபத்தால், வடசென்னை அனல்மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்து உள்ளது.

கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் உற்பத்தி துவங்கிய நிலையில், நேற்று தீவிபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீவிபத்தால் சேதம் அடைந்த மின்சாதனங்களை சரிசெய்து, மின்உற்பத்தி துவங்குவதற்கு ஒருமாதம் ஆகலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News