Ankit Tiwari Case: அமலாக்கத்துறை அதிகாரி கைது வழக்கின் முதல் தகவல் அறிக்கை

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.;

Update: 2023-12-02 07:26 GMT

அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டபோது 

அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதாகியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்திவிடுவதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். மேலும், லஞ்சம் தராவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார். உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் மருத்துவரை அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணிகளை மேற்கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரி தொடர்பான சோதனையில் ஈடுபட்டிருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்.

ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் பகுதி தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News