புதுக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Update: 2023-12-30 09:24 GMT

முதல்வர் ஸ்டாலின் 

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30.12.2023) அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள், தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பனஞ்சேரியை சேர்ந்த திரு.ஜெகநாதன் (வயது 60) த/பெ.பாலன் மற்றும் திருமதி.சாந்தி (வயது 55), க/பெ.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திரு.கோகுலகிருஷ்ணன் (வயது 26) த/பெ.ராமநாதன் மற்றும் சென்னை மாவட்டம், அமைந்தகரையைச் சேர்ந்த திரு. சதீஷ் (வயது 25) த/பெ. சக்திவேல் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த திரு.சுரேஷ் (வயது 39), த/ப.ஜெயராமன் என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News