பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கல்

மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியில் இருந்து பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 8.50 கோடி நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-04-13 09:17 GMT

பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவரின் வாரிசுதாரரிடம் உதவித்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு 50 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம், ஒவ்வொரு மருத்துவரும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிதியத்தில் சேர்ந்து பங்களிப்பாக 2020-2021 ஆம் ஆண்டில் ரூ. 6000 மொத்தமாக செலுத்தினர். பின்னர், பணியின்போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் நிதி வழங்கிட 12.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, மார்ச் 2022 ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் 500 ரூபாய் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த திட்டத்தில் 9,907 மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்து அதன் அடிப்படையில் சந்தா செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியில் இருந்து 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழந்த 9 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், 2022 ஆம் ஆண்டு பணியின்போது உயிரிழந்த 4 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளையும் என மொத்தம் 8 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த 13 மருத்துவர்களின் வாரிசுதாரர்களிடம் இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சண்முககனி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) இயக்குநர் (பொறுப்பு) ராஜமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News