மகன் உதயநிதிக்கு அரசு விழாவில் தந்தை முதல்வர் ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்
மகன் அமைச்சர் உதயநிதிக்கு திருச்சி அரசு விழாவில் தந்தையான முதல்வர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்திருந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர்களுக்கு கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட அமைச்சர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்பட அதிகாரிகள், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே தி.மு.க. கட்சி தொண்டர்கள் கொடிகளுடன் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்த பின்னர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேராக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிற்கு வந்தார். அங்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்ததும் அரசு விழா தொடங்கியது. அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மேடையில் அமர்ந்திருந்தார். உதய நிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் தனது தந்தையான முதல்- அமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்ற முதல் அரசு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் ரூ.655 கோடி மதிப்பீட்டில் 5,639 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ரூ.308 கோடி மதிப்பீட்டில் 5,951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ79 கோடி மதிப்பீட்டில் 22 ஆயிரத்து 716 பயனாளிகளுக்கு பல்வேறு நடத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த மேடைக்கு புதியவராக அமைச்சரவைக்கு புதியவராக வருகை தந்துள்ள தம்பி உதயநிதி அமைச்சரவைக்கு தான் புதியவரே தவிர உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான். உங்களுக்கு பழைய முகம்தான். அவர் அமைச்சராக பொறுப்பேற்ற போது விமர்சனம் வந்தது. விமர்சனம் வரத்தான் செய்யும். இப்படி விமர்சனங்கள் வந்த போது என்னுடைய செயல்பாட்டை பாருங்கள். அதன் பிறகு விமர்சியுங்கள் என்றார். அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெற்றார். தன்னை நிரூபித்து காட்டினார்.
உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமங்கள் ஆகிய முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஏழை எளிய ,விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள். இவைதான் அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை அவர் மேம்படுத்துவார். இந்த நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சர் ஆக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.
இந்த அரசு விழா மக்கள் நல விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை ஒருங்கிணைத்து சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கக் கூடிய அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது இந்த மகளிர் சுய உதவி குழுவினுடைய துறையை என் கைவசம் வைத்திருந்தேன். இன்றைக்கு தம்பி உதயநிதி கையில் அது ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே அதற்காக தம்பி உதயநிதியை நான் உங்கள் அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது. இந்த சுய உதவி குழுக்களை மேம்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் அதற்காக பாடுபட வேண்டும் பணியாற்ற வேண்டும். அதற்குரிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று என்னுடைய அன்பான வேண்டுகோளையும் இந்த நேரத்தில் எடுத்து வைக்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.