பொய் தகவல்: பால்வளத் துறை அமைச்சருக்கு. அண்ணாமலை 48 மணி நேரம் கெடு
பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்த கருத்து குறித்து 48 மணி நேரத்துக்குள் நிரூபிக்க வேண்டும் என அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.;
தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தை பொறுத்தவரை பால்வளத் துறை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என கூறலாம்.
இதற்கிடையே, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், பால் விலை உயர்வு, மற்றும் பால் கொள்முதல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் அண்மையில் எழுந்தன. இதற்கிடையே, ஆவின் பால் விற்பனை தொடர்பாக கருத்து தெரிவித்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ஆவின் நிறுவனத்துக்கு எதிராக செயல்படுவதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்து உள்ளார்.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
இன்றைய பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
அவருக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் தி.மு.க. அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு என அண்ணாமலை பதிவு செய்துள்ளார்.