குடும்பத் தலைவிகள் ரூ.1000 பெற போலி விண்ணப்பம்: சுட்டிக்காட்டிய அன்புமணி
குடும்பத் தலைவிகள் ரூ.1000 பெற போலி விண்ணப்பம் விநியோகிப்பது உண்மையா போலியா என விளக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை பெறுவதற்கான போலியாக விண்ணப்பங்கள் விநியோகதித்து வருவது உண்மையா போலியா என விளக்கமளிக்க வேண்டும் என எம்பி., அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.
குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை விநியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப விநியோகத்தை தடுக்க வேண்டும்.
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக விநியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்.