சுற்றுலா தலங்களில் முகக்கவசம் கட்டாயம்: சுற்றுலா துறை அமைச்சர்
தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கபடும் என சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.;
உதகை அருகே காக்கா தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணியினை மாதத்திற்கு இருமுறை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் மாதந்தோறும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் குறித்து சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி, உணவு கூடத்தையும் ஆய்வு செய்த தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன், உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் தடுப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என்றார்.
குறிப்பாக தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்குமாறு அந்தந்த சுற்றுலா தலங்களின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படும் என்றார்.
மேலும் சுற்றுலா பயணிகள் கிருமி நாசி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.