ஜிஎஸ்டி இழப்பீட்டை 2ஆண்டுகளுக்கு நீட்டிக்க நிதியமைச்சர் வலியுறுத்தல்
வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடிரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும் -தமிழக நிதியமைச்சர்.
தமிழக நிதியமைச்சர், பட்ஜெட் தாக்கலின் போது ஒன்றிய மாநில நிதி உறவுகள் குறித்து பேசியதாவது :
மதிப்புக்கூட்டுவரி நடைமுறையில் இருந்தபோது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது. இந்நிலையில், சரக்கு மற்றும் சேவைவரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடிரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும்.
கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்டமாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு ஒன்றிய அரசிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.