இராணிப்பேட்டையில் ஆம்பியர் நிறுவனத்தின் வாகன அனுபவ மையம் திறப்பு
பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர், அதன் முதல் எலெக்ட்ரிக் வாகன அனுபவ மையத்தை தமிழகத்தில் திறந்து வைத்திருக்கின்றது
நாட்டில் மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஆம்பியர் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் நாட்டு மக்களைக் கவரும் பொருட்டு மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், தற்போது ஆம்பியர் நிறுவனம் அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாட்டில் முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அதன் முதல் அனுபவ மையத்தை இராணிப்பேட்டையில் திறந்துள்ளது.
கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்பியர் நிறுவனம், மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய இலக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. தென்னக மக்களைக் கவரும் பொருட்டு அதன், மெகா மின் வாகன உற்பத்தி மையம் இருக்கும் பகுதியில் அனுபவ மையத்தை திறந்து வைத்திருக்கின்றது.
நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தி பார்ப்பதற்கான அனைத்து சிறப்பு வசதிகளையும் இந்த மையத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதன்மூலம் தயாரிப்புகள் என்ன மாதிரியான தரம் கொண்டவை என்பதை மிக சுலபமாகதெரிந்துக் கொள்ள முடியும். நுகர்வோர் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து தகவல்களும் அனுபவ மையத்தில் தெளிவாகவும், சுலபமாகவும் கிடைக்கும்.
இந்த புதிய அனுபவ மையத்தின் தொடக்கம் குறித்து கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ நாகேஷ் ஏ பசவனஹள்ளி கூறும்போது, ராணிப்பேட்டையில் உள்ள நிறுவனத்தின் மெகா மின் வாகன உற்பத்தி தளம் மற்றும் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மின் வாகன அனுபவ மையம் ஆகியவை இந்தியாவின் பசுமை இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மிக சிறப்பான தயாரிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பிற தேவைகளை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது.