ஈரோடு கிழக்கு தேர்தல்: கூட்டணி தர்மத்தை மீறாத தி.மு.க.- குழப்பத்தில் அ.தி.மு.க.

erode east constituency ,bi election ஈரோடு கிழக்கு தொகுதிஇடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. மீறாமல் காங்கிரசுக்கு ஒதுக்கியது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் குழப்பம் நிலவுகிறது.;

Update: 2023-01-20 11:16 GMT

erode east constituency ,bi election 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தர்மத்தை மீறாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதால்  காங். சார்பில் வேட்பாளம் களமிறங்குகிறாரா? என்பது ஒரு சில நாட்களில் தெரியவரும். அதே நேரத்தில் அ.தி.மு.க. பெரும் குழப்பத்தில் உள்ளது.பாஜ தனியாக களம் இறங்கப்போகிறது என செய்திகள் உலா வருவதால் என்ன  செய்யப்போகிறது இந்த கூட்டணி என அரசியல் நோக்கர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பு காரணமாக கடந்த நான்காம் தேதி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

களம் சூடு பிடித்தது

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியதோடு தேர்தல் கட்டுப்பாட்டு விதிமுறைகளும்அமல்படுத்தப்பட்டுவிட்டது.இந்த தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வைச் சேர்ந்த யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இதில் திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இது தொகுதியின் கடந்த தேர்தல் வரலாறு.

கடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றதால் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரே  போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே .எஸ் .அழகிரி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

erode east constituency ,bi election 

கூட்டணி தர்மம் மீறாத தி.மு.க.

காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில், மரணம் அடைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் அல்லது அவரது குடும்பத்தில் யாராவது ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தி.மு.க. கூட்டணி இடைத்தேர்தலை  சந்திக்க தயாராகி விட்டது. வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. தி.மு.க. தலைமையைப் பொறுத்தவரை கூட்டணி தர்மத்தை மீறாமல் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பத்திற்கு மேல் குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட த.மா.கா.போட்டியிடவில்லை. இதற்கு பதிலாக அ.தி.மு.க. வேட்பாளரே போட்டியிடுவார் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துவிட்டார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பதற்காகவும் கட்சியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் பற்றி முடிவு எடுப்பதற்காகவும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

erode east constituency ,bi election 

குழப்பத்தில் அ.தி.மு.க.

இந்த கூட்டத்தில் வேட்பாளர் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி காரணமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனது சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பினருமே தாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என  ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கிடைக்காத பட்சத்தில் தனியாக புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளாக உள்ள பா.ஜ.க. குறித்த மற்ற கட்சிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது போன்ற கேள்விகளால் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

கமல் போட்டி?

இது ஒரு புறம் இருக்க தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டாலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அல்லது அவரது குடும்பத்தில் யாராவது ஒருவர் வேட்பாளராக நிற்க விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களத்தில் இறங்க வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News