அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்பட 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது.
விசாரணைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்கக்கோரி அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு உள்பட 8 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் ஒருவரின் இல்லத்திலும் இந்த சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடக்கிறது. கோவை, கரூர், நாமக்கல். திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று முறை சோதனை நடந்த நிலையில் மீண்டும் சோதனை நடந்து வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரினார். அதையேற்ற நீதிபதி அல்லி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறையினர் செப்.15-க்குள் பதில்அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.