பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது
2011ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த நடைமுறை கைவிடப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் மண்டல இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முதல்வரின் செயலாளர்-3 நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டபடி வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவட்டை வழங்கப்பட வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு இணைய தளமான www.tnvelaivaaipu.gov.inல் அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை "இ சேவை" வாயிலாக செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவ்வசதியினையும் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது