தமிழகத்தில் உயர்ந்தது மின் கட்டணம்
தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில்தான் மாற்றம் வருகிறது.
அதன்படி மின்சாரத்தை மிக அதிக அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு அதிக கட்டணமும், குறைவான அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு இயல்பை விட குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில், தற்போது நடைமுறையில் இருந்து வரும் மின்கட்டண பட்டியலில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிற 'பீக் அவர்' என்று அழைக்கப்படுகிற உச்சநேரத்தில் (அதாவது காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மின்கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.. அதேபோல, சோலார் ஹவர் என்று அழைக்கப்படுகிற நேரத்துக்கு,இயல்பான கட்டணத்தைவிட 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்திருந்தது.
தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதுடன், மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது. அதன்படி, யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.