திருச்சியில் ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கீட்டாளர் கைது
திருச்சியில் ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கீட்டாளர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட ஜெயச்சந்திரன்.
திருச்சியில் இன்று ரூ. 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி கே. கே. நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது தந்தை பெரியநாயகம் பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விடலாம் என்று முடிவு செய்தார். இதை தொடர்ந்து அதன் காரணமாக தனது வீட்டின் மின் இணைப்பினை வீட்டு மின் இணைப்பில் இருந்து வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு தென்னூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு உறையூர் பகுதிக்குரிய மின்வாரிய கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரன் என்பவரை அணுகி டேரிப் சேஞ்ச் பற்றி பேசினார். அதற்கு ஜெயசந்திரன் உங்களுடைய வீட்டை கமர்சியலுக்கு வாடகைக்கு விட்டு உள்ளீர்கள். நான் ரிப்போர்ட் எழுதி உங்களுக்கு அபராதம் விதித்தால் ரூ. 80 ஆயிரத்துக்கு மேல் அபராதம் கட்ட வேண்டியது இருக்கும். அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ. 15,000 பணத்தை லஞ்சமாக தர வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு சந்தோஷ் தான் ஏற்கனவே டேரிப் சேஞ்ச் செய்வதற்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனுவின் அடிப்படையில் மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜெயச்சந்திரன் 3000 ரூபாய் குறைத்துக்கொண்டு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் டேரிப் சேஞ்ச் செய்து கொடுப்பேன் என்று கூறி இருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டன் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சந்தோஷிடம் கொடுத்து மின் கணக்கீட்டாளரிடம் கொடுக்கும்படி அனுப்பியுள்ளார். பின்னர் அவர்கள் தென்னூர் மின் வாரிய அலுவலக வளாகத்தில் மாறு வேடத்தில் பதுங்கி இருந்தனர்.
இந்த ஏற்பாட்டின் படி இன்று தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் சந்தோஷ், ஜெயச்சந்திரனிடம் ரூ. 12000 பணத்தை லஞ்சமாக கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் ஜெயச்சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மின்வாரிய கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரனின் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.