தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: காரணம் என்ன?
Li-ion பேட்டரிகள் என்றால் என்ன? அவை எப்படி வேலை செய்கிறது? எதனால் விபத்து நேரிடுகிறது?;
கடந்த 5 நாள்களில், ஓலா, ஒகினாவா மற்றும் ப்யூர் போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இரு சக்கர மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய தொடர் சம்பவங்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அத்தகைய வாகனங்களை இயக்கும் பேட்டரிகள் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
செல்போன், ஸ்மார்ட்வாட்ச்-களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளால் தான் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மற்ற பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில், லித்தியம் அயன் திறன் வாய்ந்ததாகவும், இலகுவாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், அவை தீ ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் அயன் பேட்டரி: சாதகமான அம்சங்கள்
லித்தியம் அயன் பேட்டரிகள் மற்ற பேட்டரிகளை காட்டிலும் எலக்ட்ரிக் கார்கள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றுக்கு பக்கவாக பொருத்தவதற்கான காரணம், அதன் குறைந்த எடை, ஹை என்ர்ஜி டென்சிட்டி, ரீசார்ஜ் செய்யும் திறன் ஆகியவை தான். இது தவிர, லி-அயன் பேட்டரிகள் பொதுவாக லீட் ஆசிட் பேட்டரியுடன் ஒப்பிடும்போது நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.
ஒரு லித்தியம் அயன் பேட்டரி ஒரு கிலோவிற்கு 150 வாட்ஸ்-மணிநேரத்தை சேமித்து வைக்கும். ஆனால், லீட்-அமில பேட்டரியால் ஒரு கிலோவிற்கு சுமார் 25 வாட்ஸ்-மணிநேரத்தை மட்டுமே சேமித்து வைத்திட முடியும்.
லித்தியம் அயன் பேட்டரிகள் மற்ற பேட்டரி வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறனை வழங்குகின்றன. இதனால், லித்தியான் அயன் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட தூரம் ஒரே சார்ஜில் பயணிக்கும், ஸ்மார்ட்போனும் நாள் முழுவதும் பயன்படுத்திட முடிகிறது.
மின்சார கார்கள் முதல் ஸ்மார்ட்போன், மடிக்கணினிகள் வரை லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்துவதால், அவை பிரபலமான பேட்டரி வகையாக மாறியுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரியில் ஒரு அனோட், கேத்தோடு, பிரிப்பான், எலக்ட்ரோலைட் மற்றும் 2 சேகரிப்பான்கள் உள்ளன. இதில், அனோட் மற்றும் கேத்தோடில் லித்தியம் சேமிக்கப்படுகிறது. அதே சமயம் எலக்ட்ரோலைட், சார்ஜ் செய்யப்பட்ட லித்தியம் அயன்களை அனோட்-லிருந்து கேத்தோடுக்கு கொண்டு செல்கிறது.
லி-அயன் பேட்டரிகளின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அதிக ஆற்றல் அடர்த்தி ஆகும். லி-அயன் பேட்டரிகளின் அதிக ஆற்றல் அடர்த்தி என்பது சில சூழ்நிலைகளில் இந்த செல்கள் நிலையற்றதாக மாறி, செயல்பாட்டைத் தடுக்கிறது. அவை பாதுகாப்பான செயல்பாட்டு வரம்பிற்குள் சிறப்பாக செயல்படுகின்றன. லி-அயன் பேட்டரி பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS) பயன்படுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கூட்டர்கள் தீப்பிடித்தற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அந்நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகினாவா பைக் தீவிபத்து குறித்து நடத்திய முதற்கட்ட ஆய்வில், வாகனத்தை சார்ஜ் செய்வதில் அலட்சியமாக இருந்ததன் காரணமாக ஷார்ட் சர்க்யூட்டில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
லி-அயன் பேட்டரிகள் வெப்பநிலையில் சிறப்பாகச் செயல்படும் ஆனால், மிக அதிக வெப்பநிலையின்போது, பேட்டரி பேக்கின் சுற்றுப்புற வெப்பநிலை 90-100 டிகிரி வரை உயரக்கூடும். அப்போதுதான் அவை தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
மின்வாகனம் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் நூற்றுக்கணக்கான பேட்டரிகள் ஒரு பேட்டரி பேக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஒரு சில பேட்டரியில் சிக்கல் ஏற்பட்டு ஷாட் சர்க்யூட் ஆனால், அதன் தாக்கம் மொத்த பேட்டரிகளுக்கும் பரவி தீவிபத்தை ஏற்படுத்தக்கூடும். லி-அயன் பேட்டரிகள் உடனடியாக தீப்பிடித்து வெடிப்பதற்கு இதுவே காரணமாக கருதப்படுகிறது.
இது தவிர, வாகனத்தின் முந்தைய விபத்துக்களின் போது பேட்டரி பேக் சேதமாகியிருந்தால், சில நேரங்களில் சார்ஜ் செய்த பிறகு தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இவற்றை தவிர உற்பத்தியாளர்களிடமும் சில குறைகள் உள்ளன.
உற்பத்தியாளர்கள் தயாரிப்புகளை வடிவமைக்க போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. அனைத்து சூழ்நிலைகளையும் துல்லியமாக சோதிக்க, அரசாங்க அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட சோதனை தரநிலைகள் போதுமானதாக இல்லை
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீவிபத்து குறித்து அந்தந்த நிறுவனங்களே ஆய்வு நடத்தி வரும் நிலையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தீப்பிடிக்கும் வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை (CFEES) அணுகியதாக கூறப்படுகிறது.