முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு குறி... எடப்பாடி சொல்வது என்ன?

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு சோதனை நடத்துவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2021-12-15 08:15 GMT

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில், இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பல மணி நேரமாக இச்சோதனை நீடித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கும் இடங்களுக்கு அருகாமையில் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் ஓமலூரில் இன்று நிருபர்களை சந்தித்த, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில், திமுக அரசு வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் சோதனை நடத்துகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, இவ்வாறு சோதனை நடத்தப்படுகிறது. திமுகவுக்கு அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாததால்தான், இதுபோன்ற சோதனைகள் நடக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், இச்சோதனை நடத்துகின்றனர். அதிமுகவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதை, திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை தந்துவிட்டு ஆட்சிக்கு வந்தனர். இப்போது, கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று இரண்டை நிறைவேற்றிவிட்டு, மீதமுள்ளவற்றை நிறைவேற்ற முடியாமல், அதை திசைதிருப்ப, சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News