திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-06 06:29 GMT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. (கோப்பு படம்).

வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகையையும் வசூலிக்கும்  திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக', தமிழக மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி, அவர்கள் படும் துயரங்களை எண்ணிப் பார்க்காமல், நிர்வாகத் திறனற்ற  மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக அரசு பதவியேற்ற கடந்த 29 மாதங்களாக, மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வுகள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுகள் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் மூலம் மென்மேலும் மக்களை துன்புறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில் (2023-2024) முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைகளை, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் காலதாமதமாக வரி செலுத்தினால், 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கெனவே, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது விடியா திமுக அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும், உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, சர்வாதிகார மனப்பான்மையோடு மறுபரிசீலனை செய்யாத விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும், தமிழகம் முழுவதும் பொதுமக்களை ஒன்று திரட்டி விடியா திமுக அரசைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News