சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இரவு காவலில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்;

Update: 2023-08-08 03:56 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி  - கோப்புப்படம் 

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவு நகலை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் ரமேஷ் நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜியை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, உச்சநீதிமன்றம் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்துள்ள நிலையில் இதுதொடர்பாக வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். பின்னர், வருகிற 12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கவும், 5 நாட்கள் காவல் முடிவடைந்ததும் செந்தில் பாலாஜியை 12-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

இந்த உத்தரவு நகலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அவர்கள் சென்னை புழல் சிறைக்கு சென்று மத்திய சிறை அதிகாரிகளிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவு நகலை கொடுத்தனர்.

இருந்தபோதிலும் அதிகாரபூர்வமாக இ-மெயில் மூலம் நீதிமன்றத்தில் இருந்து தங்களுக்கு உத்தரவு நகல் கிடைக்கவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததை தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து சிறையில் காத்திருந்தனர்.

இரவு 8.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வசம் செந்தில் பாலாஜி ஒப்படைக்கப்பட்டார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் காரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்தனர்

அங்குள்ள 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணை விடிய விடிய நடைபெற்றது.

செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராக வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 50 கேள்விகள் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி அவரது தரப்பு பதிலை பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News