தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை
40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை முழுமையாக குறி வைத்துள்ள மத்திய அமலாக்கத்துறை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாட்டில் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலில் தலையிட்ட அமலாக்கத்துறை அவர் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து சோதனைகளை நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்து வருகிறது. அரசியல் ரீதியாக பழிவாங்க அமலாக்கத்துறையை பாஜக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மணல் குவாரிகள், அதை இயக்குபவர்கள் வீடுகள் ஆகியவற்றை குறி வைத்து சோதனைகளை நடத்தியது. அதிலும் ஏராளமான ஆவணங்கள் சொத்து விபரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களைக் குறி வைத்து இன்றைய சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.
இதன்படி, சென்னை தியாகராய நகர் சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் இன்று காலை 5.30 மணியளவில் அமலாக்க துறையினரின் சோதனை நடந்து வருகிறது. இதேபோன்று, ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பகுதிகளிலும், சென்னை தி.நகரில் உள்ள விஜய் அபார்ட்மெண்ட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறையினர் உள்பட பல்வேறு நபர்களிடம் சோதனையிடப்படுகிறது. தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சண்முகம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
கடந்த 20-ந்தேதி சென்னையில் 30 இடங்கள் உள்பட தமிழகத்தின் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.