அக்னிபத் திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவா? எதிர்ப்பா? - முதல்வர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு
மத்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
முப்படைகளுக்கும் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' என்னும் புதிய திட்டத்தை கடந்த 14 ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில், 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவர். 4 ஆண்டு முடிவில் 12 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. உ.பி., பீகார் போன்ற வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சினரும் கோரியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டம் குறித்த தமது நிலைப்பாட்டை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதில், மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளில், அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தேச நலனுக்கு அக்னிபத் திட்டம் எதிரானது. இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் . நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது என்று, முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.