ஈழப்பிரச்சினையில் தி.மு.க.வின் நிலைப்பாடு- காங்கிரஸ் செய்த துரோகம்

ஈழப்பிரச்சினையில் தி.மு.க. வின் நிலைப்பாட்டையும் காங்கிரஸ் செய்த துரோகத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.

Update: 2022-04-06 07:41 GMT

வக்கீல் வீரபாண்டியன்.

நமது அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியால் அங்கு வசிக்கும் சிங்களர்கள் மட்டுமின்றி நமது தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களும் கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளனர்.

தமிழர்களை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என சபதம் செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சிதான் அங்கு நடந்து வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இவர்களின் குடும்ப ஆதிக்கத்தின் காரணமாகவும், கொரோனாவினால் ஏற்பட்ட சுற்றுலா பாதிப்பு மற்றும் வருவாய் இழப்பின் காரணமாகவும் இலங்கையில் இப்படி ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்து உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கைகளை கண்டித்து அத்தனை மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர். ஆளும் கூட்டணியில் இருந்து இருந்து 40 எம்.பி.க்களை செய்தால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து  உணவு பொருட்களுக்காகவும், எரிபொருள் தேவைக்காகவும் பல மணி நேரம் காத்து கிடந்து உயிரை மாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என தெரியாத ஒரு சூழல் நிலவுகிறது. தேசிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒட்டு மொத்த இலங்கை மக்களின் ஒரே கோரிக்கை ராஜபக்சே  குடும்பம் அரசியலிலிருந்து முற்றாக விலக வேண்டும் என்பதுதான்.

இந்த சூழலில் இலங்கையின் பூர்வீக வரலாறு தமிழ் குடிமக்கள் அங்கு நாடற்றவர்களாக ஆனதற்கான காரணங்கள் பற்றி விளக்குகிறார் அரசியல் ஆய்வாளரும், திருச்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞருமான செ.வீரபாண்டியன் அவர் கூறுவதை சற்று கேட்போமா..


ஈழ வரலாறு என்பது ஒரு நீண்ட நெடிய வரலாறு ஆகும். குமரி கண்டம் கடலில் மூழ்கிய காலம் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அகண்ட தமிழகத்தின் ஒரு பகுதியான குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது ஒரு சில பகுதிகள் சிறிய நிலப்பரப்பு உள்ள தீவுகளாக ஒதுங்கியது. அவ்வாறு கடலில் மூழ்கிய ஒரு பகுதிதான் இன்று நாம் கூறும் இலங்கையாகும்.அதை அன்று ஈழம் என்று தமிழர்கள் அழைத்தனர். ஆக இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் ஈழத் தமிழர்கள்தான்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பிழைக்க வழி தேடி சென்று கால் பதித்தவர்கள் சிங்களர்கள். சோழப் பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களான கரிகால் பெருவளத்தானும், பிற்காலச் சோழர்களில் சிறந்து விளங்கிய மாமன்னன் ராஜ ராஜனும், அவனது மைந்தன் ராஜேந்திர சோழனும் சிங்கள ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை காப்பாற்ற படையெடுத்துச் சென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றியுள்ளனர். இது வரலாற்று உண்மை.

பின்னர் அந்த தீவு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டு 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. இலங்கை விடுதலை பெற்றவுடன் சிங்கள ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. 1948 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் எனும் சட்டத்தை உருவாக்கி பல நூறு ஆண்டுகளாக இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக இருந்து இலங்கையை பலமிக்க, வளமிக்க நாடாக மாற்றிய தமிழர்களுக்கு குடியுரிமை மறுத்து ஏறத்தாழ 10 லட்சம் தமிழர்களை நாடு கடத்தினர். இந்திய அரசும் அச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது.

பின்னர் 1956 -ம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை கொண்டு வந்து ஈழத்தமிழரின் வாழ்வை அளிக்க முற்பட்டனர். அதன் பின்னர் நடந்த தமிழின அழிப்பு நடவடிக்கைகள், உரிமைப் போராட்டங்கள் பலவற்றை விவரித்துக் கொண்டே சென்றால் இக்கட்டுரை முடிக்க நீண்ட நேரம் ஆகும்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், தி.மு.க.வும் தான் இலங்கை தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தில் உண்மை இல்லை. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எடுத்த பல நடவடிக்கைகள் தான் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக அமைந்தது.

தி.மு.க.வும், கலைஞர் கருணாநிதியும் ஈழத்தமிழர்களுக்காக எத்தனையோ நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்கள். அவை வரலாற்றில் மறைக்கப்பட்டு வருகிறது. உண்மையை  வெளிப்படுத்துவதற்காகவே இந்த நேரத்தில் இக்கட்டுரையை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

1958ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்னும் சட்டத்தை இயற்றிய சிங்கள பேரினவாத அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்து சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து எழுச்சியை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்ற கழகம். அந்த  தீர்மானத்தைக் பொதுக்குழுவில் நிறைவேற்றி வரலாற்றுப் புகழ்மிக்க உரையாற்றியவர் கருணாநிதிதான். இது வரலாற்று உண்மை.

ஈழத்தமிழர்களுக்காக அவர்களது விடுதலைக்காக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ.க. அரசும் ,அதற்கு முன்பாக வி.பி. சிங் அரசு எவ்வளவோ உதவிகளை செய்து இருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.96 சட்டமன்ற இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்திருந்தது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றது.கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் தான் தி.மு.க. அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த சூழலில் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது மைய அரசாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொண்டால் ஆட்சி கவிழும் என்ற அச்சம் தி.மு.க.விற்கு இருந்தது. அதை விரும்பாத கட்சியினர் கலைஞருக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கோரி அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

உலகமே கருணாநிதியின் செயலை கண்டு வியந்து பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கருணாநிதி உண்ணாநோன்பை தொடங்கிய ஆறு மணிநேரத்திற்குள் முடித்துக்கொண்டார். உலகத் தமிழர்கள் மத்தியில் அச்செயல் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கியது. உண்ணா நோன்பால் ஒரு வியத்தகு காரியம் நடைபெற போகிறது அது அழிவின் விளிம்பில் உள்ள தமிழினம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்த தமிழர்களின் நெஞ்சம் வெடித்துவிடும் நிலைப்பாடாக அமைந்தது கலைஞரின் உண்ணாநோன்பு முடிவுக்கு வந்த செயல்பாடு.

உலகமெங்கும் உணர்ச்சிவசப்பட்ட தமிழர்கள் கலைஞரை கடுமையாக சாடினர். என்னை போன்றோரும் அன்று அதே மன நிலையிலேயே இருந்தோம் என்பது உண்மை. ஆனால் அமைதியாக உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது உண்மையை ஆராய்ந்தால் கருணாநிதியின் செயல்பாடு துரோகச் செயல் ஆகாது என்ற உண்மையை தெளிவாக நாம் உணரலாம். கருணாநிதியின் வயது, அவரின் உடல் நலக்குறைவு இரண்டும் அவரது உள்வட்டத்தில் அழுத்தத்திற்கு காரணமாக இருந்தது. அதைவிட தி.மு.கழகத்தின் அழுத்தம். தி.மு.க. பல்வேறு நிலைகளில் இடர்பாட்டை சந்தித்து அதிலிருந்து மீண்டு உணர்வோடு பயணித்து வரும் இயக்கம் என்பது உண்மை.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தை விரும்பாத மத்திய அரசு காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரவையில் மத்திய மந்திரியாக இருந்த  ப.சிதம்பரத்தை  தூது அனுப்பி கலைஞரை சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வைத்தது.

சிதம்பரம் கருணாநிதியின் உண்ணாவிரத மேடைக்கு அருகே அமர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கை அரசு இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று போரை நிறுத்த ஒப்புக்கொண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என கூறினார். கருணாநிதியிடமும் அதனை எடுத்துரைத்தனர். கருணாநிதி அதை நம்பி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

இதில் கருணாநிதி நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டார் என்பதுதான் உண்மை. கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் பேச்சை நம்பாது உண்ணாநோன்பை தொடர்ந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு அதிகம் .அவ்வாறு நன்மை ஏற்பட்டிருந்தால் உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் உலகத் தமிழினத் தலைவராக கருணாநிதியை போற்றிக் கொண்டாடி இருப்பார்கள். ஈழத்தமிழர்கள் அனைவரும் கலைஞரை காக்கும் கடவுளாக என்றும் வழிபட்டு இருப்பார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சி செய்த துரோகச் செயலில் விழுந்து விட்டதால் பெரும் சங்கடத்திற்கு ஆகிவிட்டார். என்னுடைய வருத்தம் எல்லாம் ஒன்றே ஒன்று தான். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை வருங்காலத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தூக்கி நிறுத்த முயற்சிக்க கூடாது என்பதே.

Tags:    

Similar News