பெண்களின் புருவ அழகிற்கு மெருகூட்டும் 'மைக்ரோ பிளேடிங்' பற்றி தெரியுமா?
பெண்களின் புருவ அழகிற்கு மெருகூட்டும் ‘மைக்ரோ பிளேடிங்’ பற்றி தெரிய வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.;
பெண்கள் இயற்கையிலேயே அழகு படைத்தவர்கள் தான். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு அழகு உண்டு. அந்த அழகை ரசிப்பது நமது பார்வையில் தான் இருக்கிறது. அந்த வகையில் பெண்கள் தங்களது முக அழகை மெருகேற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் ராயல் பேமிலி எனப்படும் மிக வசதியான குடும்பப் பெண்கள், வேலை பார்க்கும் பெண்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டுமே பியூட்டி பார்லருக்கு சென்று தங்களது முகத்தை அழகுப்படுத்தி கொள்வதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தனர்.
ஆனால் தற்போது அப்படி அல்ல ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்துக் காட்டுகிறார்கள் இதன் காரணமாக அழகு கலை நிலையங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் கூட ஓய்வு கிடைக்கும் போது தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். குடும்பப் பெண்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதனால் அழகு கலை நிலையங்கள் நடத்தும் அழகு கலை நிபுணர்கள் புதிது புதிதாக பெண்களின் அழகை மெருகேற்றுவதற்கு புதிய யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வந்து இருப்பது மைக்ரோ பிளேடிங் என்கிற ஒரு கலை ஆகும். பெண்களின் முக அழகை வசீகரிப்பதில் புருவங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
பேசியல், பெடிக்யூர், மெனிக்யூர் என நீண்டு கொண்டே போகும் பெண்களுக்கான அழகு கலை அலங்காரங்களின் பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருப்பது தான் மைக்ரோ பிளேடிங் என்கிற புருவங்களை அழகுப்படுத்தும் ஒரு கலை ஆகும். இது தொடர்பாக பிரபல அழகு கலை நிபுணர் ஜெயசுதா கூறி இருப்பதாவது:-
மைக்ரோபிளேடிங் முறை பெண்களின் புருவத்திற்கு மேலும் அழகை கூட்டும் அல்லது புருவத்தை சீர்படுத்தும் அலங்கார முறையாகும். சில பெண்களுக்கு புருவம் சரியாக வளராமல் இருக்கும். சிலருக்கு மெல்லியதாக இருக்கும். சிலருக்கு புருவத்தில் ஆங்காங்கே முடிகள் உதிர்ந்து காணப்படும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்து அவர்களது புருவ அழகை மேம்படுத்துவது தான் மைக்ரோ பிளேடிங் என்கிற அலங்கார முறையாகும். இந்த முறையில் ஒரு விதமான செயற்கை மைகொண்டு புருவங்களை விருப்பமான வடிவில் அமைப்போம். முதலில் புருவத்தை வாடிக்கையாளரின் விருப்பப்படி வளைவான வடிவத்தில் வரைந்து கொள்வோம். பின்பு அதில் பிரத்தியேக மை நிரப்பப்பட்ட கருவிக்கொண்டு நிஜ முடிகள் போல் உருவாக்குவோம். இதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். புருவமுடியின் தன்மையை பொறுத்து சிகிச்சை நேரம் மாறுபடும்.
இவ்வாறு வரைந்து கொண்ட மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை புருவங்களில் அடர்த்தியான மைத்திட்டுகள் தெரிவது போல் தோன்றும். பின்பு இயற்கையான நிறம் மற்றும் தோற்றத்திற்கு மாறிவிடும். மைக்ரோ பிளேடிங் முறையில் டிண்ட் எனும் தற்காலிக அலங்காரம் மற்றும் பெர்மனண்ட் எனப்படும் நிரந்தர அலங்காரம் என இரண்டு வகைகள் உள்ளன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தகுந்தார் போல் ரசாயனம் அல்லது இயற்கை மை கொண்டு புருவங்களை அமைக்கிறோம் தற்காலிக அலங்காரம் என்பது ஒரு மாதம் அல்லது 3 வாரங்கள் வரை நீடிக்க கூடியது . இதனை பயன்படுத்திக் கொண்ட பெண்கள் பராமரிக்கும் விதத்தை பொறுத்து அதன் ஆயுட்காலம் இருக்கும். நிரந்தர அலங்காரம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். முறையாக பராமரித்தால் இது மேலும் நீட்டிக்கப்படும். மைக்ரோ பிளேடிங் செய்து கொண்ட பெண்கள் புருவத்திற்கு மை பென்சில் எதுவும் பயன்படுத்த தேவையில்லை .மைக்ரோ பிளேடிங் செய்து கொண்ட பின்பு புருவத்தில் எண்ணெய் தடவ கூடாது.முகத்திற்கு சோப்பு கிரீம் பூசும்போதும், பேசியல் செய்யும் போதும் பருவத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.