'ஒமிக்ரான்' குறித்து பீதி வேண்டாம்- தமிழக டாக்டர் கூறும் ஆறுதல் தகவல்

'ஒமிக்ரான்' குறித்து பீதி வேண்டாம் என தமிழக டாக்டர் பரூக் அப்துல்லா ஆறுதலாக பல தகவல்களை கூறி உள்ளார்.

Update: 2021-11-29 08:01 GMT
டாக்டர் பரூக் அப்துல்லா

கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா பீதியில் இருந்து தற்போது தான் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டு ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்தி வளர்ச்சி பாதையில் அடி எடுத்து வைக்க தொடங்கி உள்ளன. 

இந்த நிலையில் தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் உருமாறிய  கொரோனா வீரியமான வைரஸ்களுடன் 'ஒமிக்ரான்' என்ற பெயரில்  கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நோய் கிருமியின் வேகமான பரவல் காரணமாக பல நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுடனான தங்களது விமான சேவையை நிறுத்திவிட்டன. இந்தியாவும் விமான சேவை நிறுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் உள்ளது.

'ஒமிக்ரான்' கொரோனாவை விட பல மடங்கு வீரியமிக்கது. ஏற்கனவே இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த நோய் விட்டு வைக்காமல் இறப்பு வரை துரத்தி செல்கிறது என வெளிநாடுகளில் இருந்து வரும் தகவல்களால்  பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த பீதிக்கு முடிவு கட்டுவது போல் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பொது நல மருத்துவர் டாக்டர் ஏ. பரூக் அப்துல்லா சில விளக்கங்களை அளித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளிட்டுள்ள கருத்துக்கள் கொஞ்சம் ஆறுதல் தருவதாக உள்ளது. அது என்ன என பார்ப்போமா?

அவர் கருத்துக்கள் இதோ...

'வைரஸ்களின் பரிணாம சுழற்சியில் உருமாற்றங்கள் உருவாவது இயற்கையானது. எனவே, புதிதாக உருவாகியுள்ள இந்த ஒமிக்ரான் உருமாற்றத்திற்கு பீதி தேவையில்லை. அதில் பல மனித இனத்திற்கு பாதகமின்றியும் சாதகமாகவும் சில நமக்கு பாதகமுண்டாக்கும் வகையில் இருக்கும். இதுவும் இயற்கையானது.

இந்த ஒமிக்ரான் உருமாற்றத்தால் நமக்கு பாதகம் இருக்கலாம் என்று ஆரம்ப  கட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இது எச்சரிக்கையாக இருப்பதற்காகவே அன்றி அச்சம் கொள்வதற்கல்ல. நாம் நாவல் கொரோனா வைரஸோடு வாழப்பழகி இரண்டு வருடங்கள் ஆகின்றன.அந்த வைரஸும் நம்மோடு வாழப்பழகி இரண்டு வருடங்கள் முடியப்போகின்றன.எனவே இனியும் 2020ன் ஆரம்ப காலம் போல நாம் பீதியடையும் நிலையில் இல்லை.

மாறாக அறிவியலின் துணை கொண்டு இந்த பெருந்தொற்றை வெல்லும் பாதையில் நாம் இருக்கிறோம். வீண் பதட்டம் தேவையற்றது. பெருந்தொற்றானது சில அலைகளாகவே வந்து நம்மை ஆட்கொள்ளும். இதுவரை அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் நான்கு அலைகளை எதிர்கொண்டுள்ளன. நாம் இரண்டு அலைகளை எதிர்கொண்டுள்ளோம் .எனவே, பெருந்தொற்று அலைகள் தோன்றுவதும் அதில் இருந்து நாம் மீள்தலும் இயற்கையானது.

ஒமிக்ரான் மூலம் மூன்றாம் அலை தோன்றினாலும் ஏற்கனவே தொற்றைப் பெற்றவர்களுக்கும் தடுப்பூசிகளை முறையாக இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கும் தீவிர நோய் நிலை ஏற்படும் வாய்ப்பு மிகவும் மட்டுப்படுத்தப்படும். நமது இந்திய நாட்டின் மக்கள் தொகையில் தற்போது கிட்டத்தட்ட 70% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்கும். கூடவே தடுப்பூசிகளின் மூலம் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதும் நமக்கு சாதகமே.

ஓமிக்ரான் வேரியண்ட் தற்போது தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உருமாற்றத்தை அடையாளம் கண்டு வெளி உலகுக்குக் கூறியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல் , ஹாங்காங் போன்ற நாடுகளை அதீத ஒதுக்குதலுக்கு உள்ளாக்குவது நன்மையன்று. காரணம்  இது போன்று வெளிப்படையான நாடுகளை பொது உலக சமூகம் ஒதுக்குதலுக்கு உள்ளாக்கினால் புதிய வேரியண்ட்கள் தோன்றுவதை எந்த நாடும் வெளிஉலகுக்கு கூற முன்னெடுக்காது. இது ஆபத்தான போக்காகி விடும்.

இனியும் சர்வதேசப் போக்குவரத்தை முடக்குவது நமக்கு சாதகங்களை விடவும் பொருளாதார ரீதியாக பெரும் பாதகங்களை உண்டாக்கக்கூடும். இந்த வேரியண்ட் பரவலை துல்லியமாக அடையாளம் கண்டு அந்த நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு பரிசோதனைகளை கட்டாயமாக்கலாம். இதை தான் தற்போது தமிழக அரசின் சுகாதாரத்துறை செய்து வருகிறது. பதினைந்து நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு உள்நுழையும் போது பரிசோதனை பிறகு எட்டு நாட்கள் தனிமைக்குப் பிறகு மறு பரிசோதனை என்று நிர்ணயித்துள்ளது சிறப்பான முடிவு.

இந்த வேரியண்ட்டை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் "எஸ்" ஜீன் இல்லாமல் இருப்பதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது பாசிடிவ் சாம்பிள்களில் குறிப்பிட்ட மாதிரிகளை மரபணுப் பகுப்பாய்வு செய்து இந்த வேரியண்ட் குறித்து ஆய்வு செய்ய முடியும். இதற்கான பிரத்யேக மரபணுப்பகுப்பாய்வு மையம் தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 2021 இல் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, நமது மாதிரிகளை இங்கேயே மரபணுப்பகுப்பாய்வு செய்ய முடியும். ஒமிக்ரானுக்கு முந்தைய வேரியண்ட்களை விடவும் வேகமாக பரவும் ஆற்றல் இருப்பது உண்மை.

ஸ்பைக் புரதத்தில் முப்பது இடங்களில் அங்கமாற்றம் நடைபெற்றுள்ளதால் ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் மறுதொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதும் உண்மை. ஆனால், ஏற்கனவே தொற்று ஏற்பட்டு மீண்டோருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டோருக்கும் நோயின் தீவிரத்தன்மை வெகுவாகக் கட்டுப்படும்.

தொற்று நிலையான நோயாக உருமாறும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்படும். தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஆபத்தான கொரோனா நோய் நிலை ஏற்படும் வாய்ப்பு குறைவு.எனவே, இந்தியா தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒமிக்ரான் குறித்த ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருக்கும் போதே வீண் பீதி பதட்டம் அவசியமற்றது.

மற்றபடி நாம் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தி வரும் அறிவியல் பூர்வமான அஸ்திரங்களான பொதுவெளியில் முகக்கவசம் அணிதல்,தனிமனித இடைவெளியைப் பேணுதல்,கைகளை சுத்தமாக கழுவுதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல், அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுதல்,வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுதல் ஆகிய மேற்கூறியவற்றை நாம் தொடர்ந்து பேணி வந்தால் நிச்சயம் ஒமிக்ரானையும் வென்றிட முடியும் என்று நம்புகிறேன்.' இவ்வாறு  டாக்டர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.

Tags:    

Similar News