திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது
திமுக மூத்த தலைவரும் திமுகவின் எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக மூத்த தலைவரும் திமுகவின் எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திமுகவில் இருந்து விலகி அண்மையில் தான் அவர் பாஜகவில் இணைந்து இருந்தார். பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக சொல்லி பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11ம் தேதி அன்று பாஜகவின் ஒபிசி பிரிவு செயலாளரும் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.
பத்தை ஏற்படுத்திய அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். என்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று திருச்சியில் இன்று சூர்யா பேட்டி அளித்திருந்தார் . சூர்யா பேட்டி அளித்த சிறிது நேரத்தில் அவரை கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
தகவலறிந்த பாஜகவினர் அங்கு திரண்டு வந்து காவல் நிலையத்துக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து நடந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறு இருக்க, சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், தனியார் பேருந்து மோதியதால் தனது கார் சேதம் அடைந்ததாக சொல்லி சூர்யா நஷ்ட ஈடு கேட்டு மிரட்டியதாகவும், நஷ்ட ஈடு வழங்க மறுத்ததால் அந்த பேருந்தை சூர்யா எடுத்து வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த புகாரின் அடிப்படையில் தான் சூர்யாவை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.