தி.மு.க. வை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் வாரிசு அரசியலுக்கு அச்சாரம்
தி.மு.க. வை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் வாரிசு அரசியலுக்கு அச்சாரமாக வைகோவின் மகன் எம்பி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அது மத்திய அரசியலாக இருக்கட்டும் அல்லது மாநில அரசியலாக இருக்கட்டும் எல்லா மட்டத்திலேயுமே வாரிசுகள் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும் காலமாக தற்போதைய அரசியல் களம் உள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால்நேரு பிரதம மந்திரி ஆக இருந்தபோதே தனது மகள் இந்திரா காந்தியை அரசியல் களத்தில் இறக்கினார். அதற்கான பயிற்சியும் அளித்தார். அந்த பயிற்சியே நேரு மறைவுக்கு பின்னர் அவர் பிரதமர் பதவியை அலங்கரிப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. அதே நேரத்தில் இந்திரா காந்தி பிரதமராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தபோது தனது இளைய மகன் சஞ்சய் காந்தியை தீவிர அரசியலில் இறக்கினார். இளைஞர் காங்கிரஸின் முக்கிய பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும் இந்திரா காந்தி வாரிசு அரசியலை ஊக்கப்படுத்துகிறார் என்று விமர்சனம் செய்தனர்.
சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்த பின்னர் காலத்தின் கட்டாயமாக, இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்க கூடிய சூழல் ஏற்பட்டது.
இதுவும் ஒரு வகையில் வாரிசு அரசியல் தான். ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியான பின்னர் அவரது மனைவி சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வர முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சியின் அதிகார மையமானார். தற்போது ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாவிட்டாலும் முக்கியமான அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார். ஆக காங்கிரஸ் கட்சியில் நான்காம் தலைமுறையாக வாரிசு அரசியல் தொடர்கிறது.
இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்த அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை தி.மு.க. இளைஞரணி செயலாளராக களம் இறக்கினார். மூத்த மகன் மு.க.அழகிரி மதுரை மண்டல தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.பின்னர் தனது கூட்டணி செல்வாக்கை பயன்படுத்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அவருக்கு மத்திய மந்திரி ஆக பதவி வாங்கி கொடுத்தார்.
. ஸ்டாலின் தி.மு.க.தலைவர் ஆனதும் தனது மகன் உதயநிதி உதயநிதிக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் வாய்ப்பு அளித்தார்.சட்டமன்ற உறுப்பினர் தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதும் தி.மு.க.வில் வாரிசு விமர்சனம் பரலாக வந்தது. அதற்கு மு.க. ஸ்டாலின் உதய நிதி தனது செயல்பாடுகள் மூலம் தனது திறமைய நிரூபிப்பார் என சரியான பதில் அளித்து அவர்களது வாயை அடைத்து விட்டார். மு.க. ஸ்டாலினின் இந்த செயலை பாராட்டி கே.என்.நேரு போன்ற தி.மு.க. மூத்த அமைச்சர்களே இன்பநிதி (உதயநிதி ஸ்டாலினின் மகன்) முதல் அமைச்சராக வந்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்ற கருத்தினை பொதுக்கூட்டங்களில் பதிவிட்டு கருணாநிதி குடும்பத்தின் மீதான தங்களது அளவற்ற பாசத்தை கொட்டி வருகிறார்கள். ஆக தி.மு.க.விலும் நான்காம் தலைமுறை வரை வாரிசு அரசியல் களம் தயாராக தான் உள்ளது.
இப்படி இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் வாரிசு அரசியலை விமர்சனம் செய்த தலைவர்களே தங்களது வாரிசுகளுக்கு பதவி வழங்கி அழகு பார்ப்பது என்பது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த வாரிசு அரசியல் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி. கடந்த 1993 ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து வைகோ வெளியேறிய போது தி.மு.க.வின் குடும்ப அரசியலை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. மகாபாரதத்தில் மாமன் சகுனி கோபாலபுரத்திலே மருமகன் சகுனி என்று கருணாநிதியின் அக்காள் மகனும் அப்போது எம்.பி. மற்றும் மத்திய மந்திரி ஆக இருந்த முரசொலி மாறன், கருணாநிதி ஆகியோரை மையப்படுத்தி வைகோ இது போன்ற கடுமையான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தினார். விடுதலை புலிகள் மீதான குற்றச்சாட்டை காரணம் காட்டி வைகோ வெளியேற்றப்பட்டு இருந்தாலும் வைகோ தி.மு.க. மீது வைத்த மிகப் பெரிய விமர்சனம் குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி, வாரிசு அரசியல் என்பதுதான்.
எந்த குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் என்பதை மையப்படுத்தி வெளியே வந்தாரோ அதே வைகோ ம.தி.மு.க.வை தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இன்று வரை இருந்து வருகிறார். ஆனால் கருணாநிதி காலத்திலேயே அவர் தனது விமர்சனத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். பின்னர் அந்த கூட்டணி இடையில் முறிந்தது. கருணாநிதி மறைவுக்கு பின்னர் தற்போது ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. கூட்டணியிலும் வைகோ அங்கம் வகித்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது மேல் சபை எம்.பி.யாக உள்ள வைகோ தனது மகன் துரை வைகோவை அரசியல் களத்தில் இறக்கியுள்ளார்.
கடந்த ஆண்டே அவருக்கு ம.தி.மு.க.வில் தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு ம.தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் சுவரொட்டி அச்சடித்து ஒட்டி தங்களது வருங்கால தலைவரே, வருங்கால முதல்வரே என்றெல்லாம் வாசகங்களுடன் வரவேற்று வருகிறார்கள். 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வைகோ தனது மகன் துரை வைகோ போட்டியிட நிச்சயம் ஒரு நாடாளுமன்ற தொகுதியை கேட்டு அவரை தேர்தல் களத்தில் இறக்குவார் என்றே தெரிகிறது.
இது தொடர்பாக வைகோ சென்னை தாயகத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ம.தி.மு.க.வில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமைப்பு தேர்தல் நடைபெறும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். அவர்கள் எண்ணிக்கை அளவில் அதிகமாகி விட்டனர். மீண்டும் அதே போன்று வெற்றி பெற நினைக்கின்றனர். எனவே பா.ஜ.க. அல்லாத அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் அவர்களை வெற்றி பெற முடியும். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் மக்களின் ஆதரவைத் திரட்டிய பின்னர் தான் தலைமை தாங்க முன் வரலாம் என்பது அவரது திட்டமாகவும் ,நோக்கமாகவும் இருக்கலாம்.தமிழகத்தில் பா.ஜ.க.வளர அ.தி.மு.க. தான் காரணம் என சொல்ல முடியாது. அவர்கள் பணத்தை கொட்டிக் கொடுத்து கொடிக்கம்பங்களை நடுகின்றனர். எங்கள் கூட்டணி நல்ல வலுவாக இருக்கிறது. சரியாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவது குறித்து இப்போது கூற அவசியமில்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்திகாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட மாட்டார் என்று வைகோ மறுத்து கூறவில்லை. வயது முதிர்வின் காரணமாக கட்சியை நடத்த தனது மகனை களத்தில் இறக்கினால் தான் சரியாக இருக்கும் என வைகோ நினத்திருக்கலாம். ஆக தி.மு.க.வை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் துரை வைகோ வடிவில் வாரிசு அரசியல் தொடரபோகிறது என்பதில் ஐயமில்லை.