திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.;
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், கடந்த 2012-13 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் 2015 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி தாக்கல் செய்தது உள்ளார்.
மேலும், 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், ஒரு கோடியை நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தி உள்ளதாக கூறி, திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017 ஆம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்கு தொடர முடியாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்படி தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தாலோ, தாமதமாக வரி செலுத்தினாலோ அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ள நிலையில், வருமானவரித்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
வருமான வரித்துறை தரப்பில், தாமதமாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் வரை, வருமான வரி செலுத்தவில்லை என்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமான வரிக் கணக்கை வேண்டும் என்றே தாமதமாக தாக்கல் செய்தாரா? வேண்டும் என்றே தாமதமாக வருமான வரி செலுத்தினாரா? என்பதை விசாரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி கதிர் ஆனந்த் எம்.பி. தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.