தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் நாடாளுமன்ற தொகுதி வரையறை பற்றி முக்கிய விவாதம்
சென்னை தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் நாடாளுமன்ற தொகுதி வரையறை பற்றி முக்கிய விவாதம் நடத்தப்பட இருக்கிறது.;
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நாளை (சனிக்கிழமை) சென்னை நந்தனத்தில் நடைபெறுகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4:30 மணியளவில் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில், தி.மு.க. மகளிர் அணி இந்த மாநாட்டை நடத்துகிறது. மாநாட்டிற்கு தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, சாமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் எம்.பி, பீகார் மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் லெஷி சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ராக்கி பிட்லன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் கட்டாயம், நாடாளுமன்ற தொகுதி வரையறை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் களமாகவும், பெண் உரிமை மற்றும் மகளிர் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களை ஒருங்கிணைக்கும் பாலமாகவும் இந்த மாநாடு அமையும்யும் என்றும் முக்கியமான பிரச்னைகளில் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் நேர்மறையான மாற்றங்கள் கொண்டு வருவதும், அனைத்து நிலைகளிலும் பெண்களின் முன்னேற்றமும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.