அக்டோபர் 9 - ந் தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்பு
சென்னையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 9 - ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது;
தி.மு.க. பொதுக்குழு அக்டோபர் 9-ந் தேதி சென்னை அமைந்தகரை பச்சைப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவராக மு. க. ஸ்டாலின் இருந்து வருகிறார். தற்போது பொதுச்செயலாளராக துரைமுருகன் இருக்கிறார், பொருளாளராக முன்னாள் மத்திய மந்திரி டி .ஆர். பாலு உள்ளார்.
இவர்கள் தவிர முன்னணி தலைவர்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்கள். சமீபத்தில் தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பல மாவட்ட ச் செயலாளர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். ஏற்கனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் சிலர் மாற்றப்பட்டுள்ளனர்.பதவியை இழந்த அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களை புதிதாக தேர்வு செய்ய இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த கூட்டம் பரபரப்பாக இருக்கும் என்று தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் தலைவர், பொருளாளர் உள்பட தலைமை நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் நிர்வாகிகள் மட்டத்தில் சில மாற்றங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சமீபத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதிலும் ஏற்ப்பட்ட சில அதிருப்தி இந்த கூட்டத்தில் எதிரொலிக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே தி.மு.க.துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சமீபத்தில் திடீரென்று கட்சியில் இருந்து விலகி விட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதே போல மேலும் பல நிர்வாகிகளும் அதிருப்பதியில் உள்ளனர். அதனால் இந்த கூட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் எதிர் கட்சியினர் பேசி வருகின்றன. மேலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்த தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பதவியை பெற கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே பெண் இந்த பதவியை வகித்துள்ளதால் தி.மு.க. எம்.பி.யும் , தற்போதைய மகளிர் அணி செயலாளருமான கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு இந்த பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு இந்த பதவியை புது முகங்களுக்கு வழங்கினால் கட்சி வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.இதனால் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி உள்ளது. சமீபத்தில் ஒற்றை தலைமை பிரச்சினையால் அ.தி.மு.க. பொது குழுவில் மோதல் ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தி.மு.க.வை பொருத்தவரை அந்த நிலைமை ஏற்படாது, தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடத்தி முடிக்கப்படும் என்று மூத்த நிர்வாகிகள் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் தற்போதய அரசியல் சூழ்நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் அனைத்து அரசியல் கட்சியினராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.